நம்பிக்கையிழந்த மக்களுக்கு அன்னை தெரேசா போன்று..

 

புனித அன்னை தெரேசாவின் விழாவன்று கல்லறையில் மெழுகுதிரி ஏற்றுகிறார் திருப்பீடத் தூதர் பேராயர் திகுவாத்ரோ - AP

செப்.05,2017. “மனத்தளர்ச்சியடைந்தோர், மற்றும், புரிந்துகொள்தலும், கனிவும் தேவைப்படுவோர் ஆகியோருக்கு, அன்னை தெரேசா போன்று, மகிழ்வு மற்றும் நம்பிக்கையின் வாய்ப்புக்களைத் திறந்துவிடுவோமாக” என, இச்செவ்வாயன்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 5, இச்செவ்வாயன்று, புனித அன்னை தெரேசா அவர்களின் திருநாள் சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியில், புனித அன்னை தெரேசா அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், புனித அன்னை தெரேசா அவர்கள், இறையடி சேர்ந்ததன் இருபதாம் ஆண்டு நிறைவு நாளான இச்செவ்வாய் காலையில், கொல்கத்தா புனித அன்னை தெரேசா அருள்சகோதரிகள் இல்லத்தில், விழா திருப்பலி நிறைவேற்றினார், இந்திய திருப்பீடத் தூதர், பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ. இன்னும், புனித அன்னை தெரேசா அவர்களை, கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இணை பாதுகாவலராக அறிவிக்கவிருப்பதாக, அவ்வுயர்மறைமாவட்டத்தின் பேராயர் தாமஸ் டிசூசா அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் 6, இப்புதன் மாலை 5.30 மணிக்கு, கொல்கத்தா செபமாலை அன்னை பேராலயத்தில் நிறைவேற்றப்படும் திருப்பலியில், பேராயர் திகுவாத்ரோ அவர்கள், புனித அன்னை தெரேசாவை, கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இணை பாதுகாவலராக அறிவிப்பார் எனக் கூறினார், பேராயர் டி சூசா. இந்நிகழ்வு குறித்து, IANS செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் டி சூசா அவர்கள், ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் ஒரு பாதுகாவலர் உள்ளார், இவ்வழியில், புனித பிரான்சிஸ் சவேரியார், கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார், தற்போது, புனித அன்னை தெரேசா அவர்களை, இணை பாதுகாவலராக அறிவிக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.

கொல்கத்தா போன்ற நகருக்கும், கொல்கத்தா உயர்மறைமாவட்டத்திற்கும் புனித அன்னை தெரேசா அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர், அவரின் பரிந்துரையை இறைஞ்சுவதற்கு விரும்புகின்றோம் என்று, மேலும் கூறினார், பேராயர் தாமஸ் டிசூசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொ
லி

பெருமழையால் பாதிக்கப்பட்டோரின் அருகாமையில் திருத்தந்தை

 

மேற்கு வங்காளத்தில் வெள்ளத்தில் நீந்திச் செல்லும் மக்கள் - AFP

செப்.04,2017. தெற்கு ஆசியாவிலும், அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திலும் பெருமழையால் பாதிக்கப்படுள்ள மக்களுடன் தன் ஆன்மீக நெருக்கத்தை வெளியிடுவதாக, தன் மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.வெள்ளப் பெருக்கின் பாதிப்புகளால் இன்னும் துன்பங்களை அனுபவித்துவரும் தென் ஆசிய மக்களோடு ஆன்மீக நெருக்கத்தை வெளியிடும் அதேவேளை, பெருமெண்ணிக்கையில் குடிபெயரவும், பொருள் சேதத்திற்கும் காரணமாகியுள்ள டெக்சஸ் மாநில சுறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடு தன் உயிர்துடிப்புள்ள பங்கேற்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.தென் ஆசியாவில் பெய்த பெருமழையால், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில், 4 கோடியே 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர்.இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், இவ்வாரத்தில், தான் கொலம்பியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதையொட்டி வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் நன்றிகூறுவதாகவும் தெரிவித்தார், திருத்தந்தை.வரும் புதன் கிழமை, செப்டம்பர் 6ம் தேதியிலிருந்து, 11ம் தேதிவரை திருத்தந்தையின் கொலம்பியா நாட்டு திருத்தூதுப்பயணம் இடம்பெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொ
லி

திருத்தந்தை: வெளிவேடம் என்பது சமூகங்களைக் கொலை செய்கிறது

சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத் திருப்பலியில் மறையுரையாற்றும் திருத்தந்தை

 

ஜூன்,06,2017. வெளிவேடம் என்பது இயேசுவின் மொழியல்ல என்பதால், அது, கிறிஸ்தவர்களின் மொழியாகவும் இருக்க முடியாது என்பதை மையக் கருத்தாகக் கொண்டு, இச்செவ்வாய்க்கிழமை காலை, சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வெளிவேடம் என்பது சமூகங்களை கொல்லும் ஒன்று, என உரைத்த திருத்தந்தை, 'வெளிவேடக்காரரே' என்ற வார்த்தையை, இயேசு, பலமுறை, சட்ட வல்லுனர்களை நோக்கிப் பயன்படுத்தியுள்ளார், ஏனெனில், அவர்கள் கண்ணோட்டம் ஒன்றாகவும், எண்ணங்கள் வேறாகவுமிருந்தன என்று கூறினார்.

வெளிவேடம் என்பதற்கு நேர் எதிரான உண்மைத் தன்மைகளை பார்க்க, இயேசு நம்மை அழைக்கிறார் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  செவ்வாயன்று வாசிக்கப்பட்ட நற்செய்தியில் 'சீசருடையதை சீசருக்கும், கடவுளுடையதை கடவுளுக்கும் கொடுங்கள்' என்று இயேசு கூறிய வார்த்தைகளை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

தன்னை சிக்க வைக்க நினைத்த பரிசேயர்களின் தூதர்களிடம் இயேசு, ஒரு தெனாரியத்தைக் கொண்டுவர வைத்து, அதைக் காண்பித்து உண்மை நிலையை நேரடியாக பார்க்க வைத்ததைச் சுட்டிகாட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிவேடக்காரர்களின் இரட்டை முகம் இயேசுவால் இங்கு தெளிவாக வெளிக்கொணரப்பட்டது என்றார்.

வெளிவேடக்காரர்களின் வார்த்தைகள் ஏமாற்றத்தைக் கொணர்பவை என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் வீண்புகழ்ச்சியை வழங்கி, பின்னர் மக்களை அழிவுக்கு இட்டுச்செல்லும் இவ்வார்த்தைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, ஏவாளிடம் பாம்பு பேசிய வார்த்தைகளை நினைவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322