ஒளிவிழா - 2016

18-12-2016 அன்று இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகத்தின் பலெர்மோ ஆன்மீகத்தளத்தின் ஒளிவிழா நிகழ்வானது கோல்டன் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக இலங்கையிலிருந்து வருகை தந்த அருட்பணி. யோசப்ராஜ் கிளேயர் அ.ம.தி அடிகளார் கலந்து கொண்டார். இவர் தனது உரையில் தீவனத்தொட்டியில் வாழ்வளிக்கும் உணவாகவும், ஒளியாகவும் பிறந்த இயேசு எல்லோருக்கும் ஊட்டம் அளித்ததைப்போன்று  நாமும் மற்றவர்களுக்கு ஊட்டம் கொடுக்க வேண்டுமென்று கூறிக்கொண்டார்.  சிறப்ப விருந்தினராக வருகை தந்திருந்த பலெர்மோ மாநகர மேஜர் ஒர்லாந்தே அவர்கள் நீங்கள் இலங்கைத்தமிழர்களாய் இருந்தாலும் பலெர்மோ மக்கள் தான். உங்கள் ஆன்மீக இயக்குனரின் வழிகாட்டலில் இன்னும் எழுச்சி பெற ஆசிக்கின்றேன். ‘2017ஆம் ஆண்டு இளைஞர் ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில் முன்னெடுக்கப்படும் அனைத்து விடயங்களிலும் தமிழ் இளைஞர்கள் பங்குபற்ற வேண்டுமென அழைப்பு  விடுத்தார்.
நடனங்கள், நாடகங்கள், தென்மோடி நாட்டுக்கூத்து என பல வகையான தமிழர் பாரம்பரிய கலை நிழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது. 
   

திருத்தந்தை : இன்றைய உலகம் பதட்டநிலைகளால் நிறைந்துள்ளது

டிச.03,2016. இன்றைய உலகம் பதட்டநிலைகளால் நிறைந்திருந்தாலும், நம்பிக்கையின் கீற்றுகளும் தெரிகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நூற்றுக்கணக்கான தொழில் அதிபர்களிடம், இச்சனிக்கிழமையன்று கூறினார்.Fortune, TIME ஆகிய இரு இதழ்களும் இணைந்து, “21ம் நூற்றாண்டு சவால் : தாக்கங்களை உருவாக்கும் புதிய ஒப்பந்தங்களை நோக்கி..” என்ற தலைப்பில், உரோம் நகரில் நடத்திய இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரை நிகழ்த்திய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.இன்றைய உலகில், மக்கள் மத்தியில் சமத்துவமற்ற நிலை தொடர்ந்து விரிந்துகொண்டே செல்கின்றது என்றும், போர், வறுமை மற்றும் இவற்றால் மக்கள் புலம்பெயர்ந்தல் போன்ற காரணங்களால், பல சமூகங்கள் நேரிடையாகப் பாதிக்கப்பட்டுள்ளன மற்றும், இம்மக்கள்  தங்களின் அச்சங்களையும், கவலைகளையும் வெளிப்படுத்துகின்றனர் என்றும், இவர்கள் தங்களின் குரல் கேட்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மக்களின் நம்பிக்கையாக, இந்தப் பிரதிநிதிகள் உள்ளனர் என்றும், உலக அளவில் நிலவும் அநீதிகளைக் களைவதே, நமது பெரிய சவால் என்றும் கூறிய திருத்தந்தை,  அநீதிகளைக் களையும் முயற்சிகளில், எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். நம் நிறுவனங்கள் மற்றும், பொருளாதார அமைப்புக்களை மாற்றுவதற்கு, Fortune-TIME உலகளாவிய அமைப்பு தொடங்கியுள்ள பணிகள், தொடர்ந்து இடம்பெறுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, இந்த முயற்சியில், இவர்கள் எதிர்பார்க்கும் மக்களிடமிருந்து உதவி கிடைக்கட்டும் என வாழ்த்தினார்.Fortune Live Media மற்றும் TIME நிறுவனம் நடத்திய இக்கருத்தரங்கில், Fortune நிறுவனத்திலிருந்து 500 பேர் மற்றும் TIME நிறுவனத்திலிருந்து 100 பேர் கலந்துகொண்டனர் எனக் கூறப்பட்டுள்ளது.அதிகமதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், வளங்கள் பரந்த அளவில் பகிரப்படல், வறுமையை ஒழிப்பதற்கு நீடித்த, நிலையான நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, இந்த நிறுவனங்கள், இம்முயற்சியில் இறங்கியுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஏழ்மையை ஒழிப்பதோடு தொடர்புடைய, தொழில்நுட்பம், வேலை வாய்ப்புகள், உணவு, தண்ணீர், சுற்றுச்சூழல், எரிவாயு போன்ற தலைப்புக்கள், இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

அ.பணி கோல்வன்பாக் இறப்புக்கு திருத்தந்தை இரங்கல் செய்தி

நவ.28,2016. அகில உலக இயேசு சபையின் முன்னாள் தலைவர் அருள்பணி பீட்டர் ஹான்ஸ் கோல்வன்பாக் (Peter Hans Kolvenbach) அவர்கள், காலமானதையடுத்து, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை, இத்திங்களன்று அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.அகில உலக இயேசு சபையின் தற்போதைய தலைவர் அருள்பணி அர்த்தூரோ சோசா அபாஸ்கல் (Arturo Sosa Abascal) அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், அருள்பணி கோல்வன்பாக் அவர்கள், கிறிஸ்துவுக்கும், அவரின் நற்செய்திக்கும், முழுவதும் பிரமாணிக்கமாக இருந்தார் எனவும், இது, அவர் தனது தலைமைப் பணியை, திருஅவையின் நன்மைக்காக, மிகுந்த மனத்தாராளத்துடன், தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதில் விளங்கியது எனவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைந்த அருள்பணி கோல்வன்பாக் அவர்களின் ஆன்மா, இறைவனின் சாந்தியை அடைவதற்கு, இறை இரக்கத்தின் வழியாக, தான் செபிப்பதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அருள்பணி கோல்வன்பாக் அவர்களின் அடக்கச் சடங்கில், தான் ஆன்மீக முறையில் ஒன்றித்திருப்பதாகவும், அவரின் பிரிவால் வருந்தும் இயேசு சபை சகோதரர்களுக்கும், மற்றவர்களுக்கும், தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அளிப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அருள்பணி கோல்வன்பாக் அவர்கள், லெபனான் நாட்டுத் தலைநகர் பெய்ரூட்டில், நவம்பர் 26, இச்சனிக்கிழமையன்று இறைவனடி எய்தினார். இவர் தனது 88வது வயதை, நவம்பர் 30, இப்புதனன்று நிறைவு செய்யவிருந்தார்.அகில உலக இயேசு சபையின் 29வது தலைவராக, 1983ம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி கோல்வன்பாக் அவர்கள், 2008ம் ஆண்டு, அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1928ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி, ஹாலந்து நாட்டின் Drutenல் பிறந்த இவர், தனது 19வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். இவர், 68 ஆண்டுகள் இயேசு சபை துறவியாகவும், 55 ஆண்டுகள் அருள்பணியாளராகவும், வாழ்ந்திருப்பவர். தனது 30வது வயதில் பெய்ரூட்டுக்கு மறைப்பணியாற்றச் சென்ற அருள்பணி கோல்வன்பாக் அவர்கள், 2016ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி பெய்ரூட்டில் காலமானார்.

ஏறக்குறைய 25 ஆண்டுகள், அகில உலக இயேசு சபையின் தலைவராகப் பணியாற்றியவர், அருள்பணி கோல்வன்பாக்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322