வாழ்த்துகின்றோம்.

யாழ் மாகாண அமலமரித்தியாகிகள் குழமத்தின் திருத்தொண்டராகிய அருட்சகோதரர்.பீட் சுஜாகரன் அ.ம.தி அவர்கள் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு. ஜஸ்ரின் பேணாட் ஆண்டகை அவர்களால் இன்று யாழ் மரியன்இனை பேராலயத்தில் குரவாக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார். இப்புதிய குரவிற்கு இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக இறைமக்கள் தங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றார்கள். இவர் கடந்த காலங்களில் உரோமையில் கல்வி கற்ற போது எமது ஆன்மீகத்தளத்திற்கு வருகைதந்து எமக்கு பல்வேறு வழிகளில் உதவியிருக்கின்றார் என்பதனை நன்றியோடு நினைவு கூருகின்றறோம். இவர் இறையாசீரோடு இறைபணியினை சிறப்பாக ஆற்றிட எமது செபத்தில் தொடர்ந்து வேண்டுகின்றோம்.
 

பொங்கல் விழா

15-01-2017 அன்று இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகத்தின் பலெர்மோ தள இறைமக்கள் தங்கள் பொங்கல் விழாவினை சன் நிக்கோலா ஆலயத்தில் ஞாயிறு திருப்பலியுடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். 
தமிழர் பண்பாட்டு வரவேற்பு முறையில் பன்னீர் தெளித்து, சந்தனப்பொட்டு வைத்து அனைத்து இறைமக்களும் ஆலயத்திற்குள் வரவேற்கப்பட்டு, தொடர்ந்து மாலையிடுதல், குத்துவிளக்கேற்றல், வரவேற்பு கலசம் கொண்ட நடனம், என தமிழர் பாரம்பரியத்துடன் திருப்பலி ஆரம்பமாகியது. 
திருப்பலியினை அருட்பணி. இம்மானுவேல் அடிகளாரும், எமது ஆன்மீக இயக்குனரும் இணைந்து நிறைவேற்றினார்கள். 
அருட்பணி. இம்மானுவேல் அடிகளார் தனது மறையுரையில் “.நாம் தமிழர்களாக விருப்பி பிறக்கவில்லை. கடவுளின் திட்டப்படியே பிறந்துள்ளோம். எமது பேசும் மொழி தமிழாக இருப்பதும் இறை சித்தமே. முதலில் தமிழர்களாக பிறந்தோம். பின்பு திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாக மாறினோம். எனவே நாம் தமிழ்க்கிறிஸ்தவர்கள். ஆகவே நாம் எம் பண்பாடுகள், கலாச்சாரங்களை பின்பற்றுவதில் தவறில்லை. தமிழர்களுக்கு உரிய சாதியம், பிரதேசவாசதம், ஆண் ஆதிக்கம் போன்ற கழிவுகளை அகற்றி, கிறிஸ்து காட்டிய சமத்துவம், ஒற்றுமை, மன்னிப்பு, ஆகிய நற்பண்புகளோடு வாழ்வதே தமிழ்க்கிறிஸ்தவர்களது கடமையாகும். திருச்சபையானது மறைபரப்புப்பணியின்போது இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப்பின்பு அனைத்து இனத்தவரையும் அவ்வவ்வினக்கலாச்சார பண்பாடுகளுடனேயே உள்வாங்கியது. எனவே பொங்கல் திருப்பலியில் பங்குகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.” என்று பொங்கல் விழாத்திருப்பலியின் முக்கியத்துவத்தையும் தமிழர்களின் பாண்பாடு, கலாச்சாரத்தையும், தமிழ்க்கிறிஸ்தவர்களாகிய நாம் எவ்வாறு வாழவேண்டும் என்பதையும் மிகவும் எளியமுறையில் அழகாக விளக்கிக்கூறியிருந்தார்.
தொடர்ந்து ஆலய மண்டபத்தில் பொங்கல் விருந்துபசாரத்துடன் இனிதே பொங்கல் விழா நிறைவுற்றது. மாலையில் எமது சகோதர பணித்தளமாகிய சன் பிலிப்பு நேரி ஆலயத்திலும் பொங்கல் விழா சிறப்பாக திருப்பலியுடன் நடைபெற்றமையும் மகிழ்ச்சிக்குரிய விடயமே. 
   
   

புனிதர் நிலைக்கு உயர்த்த இந்தியாவிலிருந்து 8 பரிந்துரைகள்

சன.12,2017. கடந்த 10 ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவையில், புனிதர் நிலைக்கு உயர்த்தும் பரிந்துரைகளில் பெரும்பான்மையானவை, இத்தாலி நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அருளாளர், மற்றும் புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் குறித்த பணியில் ஈடுபட்டுள்ள பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள், இந்த வழிமுறைகள் பற்றி வத்திக்கானில் நடைபெற்ற ஒரு பயிற்சிப் பாசறையில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார். அருளாளர், மற்றும் புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் குறித்து, சனவரி 9ம் தேதி, இத்திங்கள் முதல் இரு மாதங்களுக்கு வத்திக்கானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  பயிற்சி வகுப்புக்களில் கலந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து வந்துள்ள பிரதிநிதிகளுக்கு துவக்க உரை வழங்கிய கர்தினால் அமாத்தோ அவர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் மிகுந்த கவனத்துடன் வகுக்கப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார். 2006ம் ஆண்டுக்கும், 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில், புனிதர் நிலை பேராயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 351 பரிந்துரைகளில், 139 பரிந்துரைகள், அதாவது, 40 விழுக்காடு பரிந்துரைகள் இத்தாலியிலிருந்து வந்துள்ளன என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் சுட்டிக்காட்டினார். 43 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ள பரிந்துரைகளில், இத்தாலியிலிருந்து 139, ஸ்பெயின் நாட்டிலிருந்து 60, போலந்து நாட்டிலிருந்து 22, பிரேசில் நாட்டிலிருந்து 13 பரிந்துரைகள் வந்திருப்பதை, கர்தினால் அமாத்தோ அவர்கள் குறிப்பிட்டார். ஆசிய நாடுகளில், இந்தியாவிலிருந்து 8 பரிந்துரைகளும், தென் கொரியாவிலிருந்து 2, மியான்மாரிலிருந்து 2, சிங்கப்பூரிலிருந்து 1 என்ற எண்ணிக்கையில், புனிதர்கள் குறித்த பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டு, 10 முறை, புனிதர் பட்ட நிகழ்வுகளும், 14 முறை அருளாளர்களாக உயர்த்தப்படும் நிகழ்வுகளும் நடைபெற்றன என்பதும், புதிய புனிதர்கள், ஆல்பேனியா, அர்ஜென்டீனா, மெக்சிகோ, பிரான்ஸ், இத்தாலி, போலந்து, ஸ்பெயின், சுவீடன் ஆகிய எட்டு நாட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322