அருங்கொடை இயக்கம் ஆவியாரின் விலைமதிப்பற்ற கருவி

கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின் பொன்விழா - RV

02/06/2017 15:54
 
 
 

 

ஜூன்,02,2017. உரோம் நகரில் தங்களின் பொன்விழாவைச் சிறப்பித்துவரும், உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின் உறுப்பினர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கம், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு தூய ஆவியாரின் விலைமதிப்பற்ற கருவி எனக் கூறியுள்ளார்.தூய ஆவியாரின் ஒவ்வொரு செயலும், பன்மைத்தன்மையில் ஒன்றிப்பைக் கொணர்வதுபோன்று, தூய ஆவியார், கிறிஸ்தவ ஒன்றிப்பையும் விரும்புகிறார் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

எகிப்தில் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருத்தந்தை தவாத்ரோஸ் அவர்களுடன் சேர்ந்து செபிக்கையில் கூறியது போன்று, திருநற்கருணை கொண்டாட்டத்தில், பிற கிறிஸ்தவ சகோதரர்களுடன் ஒன்றிணைவதற்கு, அருங்கொடை இயக்கத்தினர் பணியாற்றுமாறும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். செபத்திலும், பணியிலும் பிற கிறிஸ்தவ சகோதரர்களுடன் ஒன்றிணைவதற்கு, அருங்கொடை இயக்கத்தினர் சிறந்த கருவிகள் எனவும், திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

மே 31, இப்புதனன்று உரோம் நகரில் தொடங்கியுள்ள உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின் பொன் விழா மாநாடு, ஜூன் 4, வருகிற ஞாயிறு சிறப்பிக்கப்படும் தூய ஆவியார் வருகைப் பெருவிழாவுடன் நிறைவடையும். இம்மாநாட்டில், ஏறக்குறைய 130 நாடுகளைச் சேர்ந்த முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2019ம் ஆண்டு அக்டோபர் சிறப்பு மறைப்பணி மாதம்

பாப்பிறை மறைப்பணி கழகத்தினர் சந்திப்பு - EPA

03/06/2017 15:05
 
 
 

 

ஜூன்,03,2017. 2019ம் ஆண்டு அக்டோபரை, சிறப்பு மறைப்பணி மாதமாகச் சிறப்பிக்குமாறு, உலகளாவியத் திருஅவையைத் தான் விண்ணப்பிக்கவிருப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைப்பணி கழகத்தினரிடம் கூறினார்.

பாப்பிறை மறைப்பணி கழகங்களின் 170 பிரதிநிதிகள், ஒரு வராமாக நடத்திய மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்திய சிறப்பு மறைப்பணி மாதம் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களின்  Maximum illud (நவ.30,1919) என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் நூறாம் ஆண்டை முன்னிட்டு, இந்தச் சிறப்பு மறைப்பணி மாதம் அறிவிக்கப்படும் என்றும், இத்திருமடல், முதல் உலகப் போருக்குப்பின், கத்தோலிக்க மறைப்பணிக்குப் புதிய உந்துதல் அளிப்பதாய் இருந்தது என்றும் கூறினார்.

இப்பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தூய்மையான வாழ்வுக்கு ஒத்த நடவடிக்கைகளை வாழ்வில் செயல்படுத்துமாறும், புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிப்பதற்கு, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு, பணிவுடனும், திறந்த மனத்துடனும் வாழுமாறும்  கேட்டுக்கொண்டார்.புதுப்பித்தலுக்கு மனமாற்றம் தேவைப்படுகின்றது, இது, கிறிஸ்துவை அறிவிப்பதற்கும், சான்று வாழ்வு வழியாக, மக்கள் அவரைச் சந்திக்க உதவுவதற்கும் ஒரு நிலையான வாய்ப்பாக அமைந்துள்ளது என்று, திருத்தந்தை கூறினார்.

பாப்பிறை மறைப்பணி கழகங்கள், தலத்திருஅவைகளுக்கு ஆற்றும் ஆன்மீக மற்றும், பொருளாதார உதவிகள், அத்திருஅவைகள், நற்செய்தியில் உறுதியான அடித்தளத்தை அமைக்க உதவ வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டில் வெளியிட்ட நற்செய்தியின் மகிழ்வு (Evangelii gaudium) என்ற திருத்தூது அறிவுரை மடலின் வழியில், திருஅவை மறைப்பணிக்கு தன்னை அர்ப்பணிக்க ஊக்குவிப்பதாய் இந்தச் சிறப்பு மறைப்பணி மாதம் அமையும் எனச் சொல்லப்பட்டுள்ளது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322