கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா

மார்ச்,02,2015 இந்தியா, மற்றும் இலங்கை கடல்படை பாதுகாப்பு உதவியுடன், கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா, சிறப்புடன் நடந்தேறியுள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில், பாக் வளைகுடா கடலில் அமைந்துள்ள கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் இந்தியாவிலிருந்து 110 படகுகளில் சென்ற 4003 பேரும், இலங்கையிலிருந்து 3000த்திற்கும் மேற்பட்டோரும் இச்சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இடம்பெறும் கச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு, இரு நாடுகளிலுமிருந்து வந்திருந்த பக்தர்களுடன், சிலுவைப்பாதை, ஞாயிறு காலை திருப்பலி மற்றும் தேர்பவனி இடம்பெற்றன.

1974ம் ஆண்டு, கச்சத் தீவு, இலங்கைக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விழா நடத்துவதில் ஏற்பட்டச் சிக்கல்கள், 2010ம் ஆண்டிற்குப்பின், ஓரளவு சுமுகமாகியுள்ளதைத் தொடர்ந்து, திருவிழாக் கொண்டாட்டங்கள் இருநாட்டு மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்று வருகிறது.

1913ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோர், கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயத்தை ஓலைக் குடிசையாக எழுப்பினர்.

ஆதாரம் : Dinamalar / வத்திக்கான் வானொலி

இராயப்பு யோசப் ஆண்டகையின் நத்தார் தின செய்தி

நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களை சேர்த்து அரவணைத்துக்கொண்டு செல்லக்கூடிய ஜனாதிபதி நாட்டுக்குத் தேவையெனவும், போர் முடிவுற்றும் மக்களுக்கு சுதந்திரம், சமாதானம் கிடைக்கவில்லையெனவும் மன்னார் ஆயர் இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை நத்தார் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நத்தார் தின நள்ளிரவு திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் 'இயேசுவே ஆண்டவர்' மண்டபத்தில், மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலா நிதி இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

நள்ளிரவுத் திருப்பலியயை தொடர்ந்து ஆயர் கருத்துக்கூறுகையில்,

அன்பும், அமைதியும் இலங்கைக்கு மட்டுமல்ல உலகுக்கும் தேவைப்படுகின்றது என்பதை இன்றைய கிறிஸ்து பிறப்பு எமக்கு தெரிவிக்கின்றது. இலங்கையில் போர் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் நாட்டுக்கும் எமது மக்களுக்கும் இன்னும் சுதந்திரம், சமாதானம் கிடைத்ததாக இல்லை.

யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தியை சந்தித்து கலந்துரையாடிய போது, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 5,000 வீடுகளே தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பது தொடர்பிலும், வடபகுதிகளில் வியாபித்திருக்கும் இராணுவப் பிரசன்னம் காரணமாக மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் இல்லாத நிலை குறித்தும் விவாதித்திருந்தோம்.

இவ்வாறானதொரு நிலையிலேயே இன்று நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தலை நாம் சந்தித்திருக்கின்றோம். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதொரு தலைமைத்துவம் இன்று தேவைப்படுகின்றது.

இதற்காக நாம் இறைவனிடம் மன்றாட வேண்டும். நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களை சேர்த்து அரவணைத்துக்கொண்டு செல்லக்கூடிய தலைவர்கள் இன்று எமக்குத் தேவைப்படுகின்றது என அவர் கூறினார்.

 

நன்றி தமிழ்வின்

உரோம் மாநாட்டில் மன்னார் ஆயர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே வட இலங்கைப் பகுதிக்கு வருகை தரும் முதல் திருத்தந்தையாக இருப்பார் என்றும், அவரது வருகை இலங்கையில் நிலவும் துயரம் நிறைந்த பிளவுகளை குணமாக்கும் என்று தான் நம்புவதாகவும் இலங்கை ஆயர் ஒருவர் கூறினார்.

ஆசியாவில் மறைபரப்புப்பணி: திருத்தந்தை 2ம் ஜான்பால் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் வரைஎன்ற தலைப்புடன், உரோம் நகரில் இச்செவ்வாயன்று நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், அருள் பணியாளர் ஜோசப் வாஸ் அவர்கள், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார் என்று கூறினார்.

இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களில் 32 விழுக்காட்டினர் மன்னார் மறைமாவட்டத்தில் வாழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், 30 ஆண்டுகளாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரிலும், அதைத் தொடர்ந்த கடந்த 5 ஆண்டுகளும் பெருமளவு துன்பங்களைத் தாங்கி வருபவர்கள் தமிழர்களே என்று கூறினார்.

இத்தகையச் சூழலில் வட இலங்கைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகை தருவது, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கும் என்று ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

 

நன்றி: வத்திக்கான் வானொலி

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322